மூன்றாம் நிலை கட்டுரை

மழை

மழை ஒரு அருமையான, அழகான, முக்கியமான இயற்கை நிகழ்வு. மழை வந்தால் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மழை சுற்றுப்புற சூழலை குளுமையாக்குகிறது. எனவே அனைவரும் மகிழ்கின்றனர். இது பயிர்களுக்கு தேவையான நீரைக் கொண்டு சேர்ப்பதால் விவசாயிகள் மகிழ்கின்றனர். இது நாம் அனைவருக்கும் வாழத் தேவையான நீரை குளம், குட்டைகள் ஆறுகள், ஏரிகள், மற்றும் நீர் நிலைகளில் கொண்டு சேர்க்கிறது. எனவே மழை இல்லாமல் நனைந்த உலகில் உயிர்கள் வாழ இயலாது. போதுமான மழை பெய்யவில்லை எனில் நீர் நிலைகள் வறண்டு விடும். பஞ்சம், பசி, பட்டினி ஆகியன ஏற்பட்டு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும்.

மழைக்குப் பின்னால் உள்ள அறிவியல் மிகவும் ஆச்சரியமான, சுவாரஸ்யமான ஒன்றாகும். மழை நீருக்கு மூலமான ஆதாரம் கடல் நீர்தான். கடல் நீர் சூரிய வெப்பத்தினால் ஆவியாகி பூமியின் வளிமண்டலத்தில் தூசுத் துகள்களுடன் நீராவியாக காணப்படுவதை நாம் மேகங்கள் என்று கூறுகிறோம். குளிர்வடையும்போது மீண்டும் நீராக மாறி புவியின் மேற்பரப்பில் மழையாகப் பொழிகின்றன. இந்த மழை நீர் ஆறுகள் மூலம் மீண்டும் கடலை சென்றடைகின்றது. இதனிடையில், நீர் நிலைகளில் சேரும் நீரைத்தான் நாம் குடிக்கவும், மற்றும் பல காரணங்களுக்காகவும் பயன்படுத்துகிறோம்.

மழையைப் பற்றி பாடாத புலவர்கள் இல்லை என்று கூறலாம். மழை அழகான இயற்கை நிகழ்வாகும். திருக்குறளில் திருவள்ளுவர், “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்று கூறுகிறார். இதன் பொருள் யாதெனின், “நல்லவர்களுக்காகத்தான் மழை பெய்கிறது, ஆயினும் அப்படிப் பெய்யும் மழை எல்லோருக்கும் பயன்படுகிறது. அவ்வாறே, நல்லோர் இல்லையென்றால் மழை பெய்யாது என்றும் பொருள் படும்.”

மழை நீர் நாம் வழுவதற்குத் தேவையான ஒரு மிக முக்கியமான காரணியாகும். மழை இல்லாவிடில் உலகில் தோன்றிய உயிர்கள் எல்லாம் பாதிக்கப்படும். மழை பெய்ய மரங்கள் வளர்ப்பது அவசியம். மரங்களை வளர்ப்போம் மழை பெறுவோம்.