நான்காம் நிலை கட்டுரை

முச்சங்கம்

பாண்டிய மன்னர்கள் தொடக்கத்தில் கடல்கொண்ட தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அங்கு, தமிழ் அறிஞர் பெருமக்களைக் கொண்டு தமிழ் இலக்கிய ஆய்வும், செய்யுள் இயற்றுதலும் நடைபெற்றன. அதுவே முதற் சங்கம் எனப்பட்டது.

தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது.

கபாடபுரமும் கடலால் அழிவுற்ற பிறகு இன்றைய மதுரைக்குப் பாண்டியர் தலைநகரை மாற்றினர். இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்று கி.பி.200 வரை நடைபெற்றது. இது கடைச்சங்கம் என்று அழைக்கப்பட்டது.

இவ்வாறு மூன்று சங்கங்கள் நடத்தப் பெற்று, புலவர்களும், அரசர்களும் பல்வேறு செய்யுட்களைப் பாடி, தமிழை வளர்த்தனர். இம்முச்சங்கங்களின் காலமே சங்க காலம் என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது.

குறிப்பு தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம்
சங்கம் இருந்த இடம் கடல் கொண்ட தென்மதுரை கபாடபுரம் தற்கால மதுரை
சங்கம் நிலவிய ஆண்டுகள் 4440 (37 பெருக்கல் 120) 3700 (37 பெருக்கல் 100) 1850 (37 பெருக்கல் 50)
சங்கத்தில் இருந்த புலவர்கள் அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள். குன்றெறிந்த முருகவேள், முரிஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன், இத் தொடக்கத்தார் அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை இத் தொடக்கத்தார் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார், கணக்காயர் மகனார் நக்கீரனார் இத் தொடக்கத்தார்.
புலவர்களின் எண்ணிக்கை 4449 3700 449
பாடிய புலவர்களின் எண்ணிக்கை 549 59 49
பாடப்பட்ட நூல்கள் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை இத்தொடக்கத்தன. கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் இத்தொடக்கத்தன நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை இத் தொடக்கத்தன.
சங்கம் பேணிய அரசர்கள் காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை
சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை 89 59 49
கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை 7 5 3
அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல் அகத்தியம் அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம் அகத்தியம், தொல்காப்பியம்