நான்காம் நிலை கட்டுரை

தமிழர் விளையாட்டுகள்

தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் இன்றும் பல விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. இவ்விளையாட்டுகளை அறிதல் தமிழரின் தொன்மையை அறிவதற்குச் சான்றாக அமையும். கிராமப்புறங்களில் விளையாடும் ஆடவர் விளையாட்டு மகளிர் விளையாட்டு, சிறுவர் சிறுமியர் விளையாட்டு முதலிய விளையாட்டுகளைப் பலவாறு வகைப்படுத்தலாம். குறிப்பாகத் தமிழ்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் காணலாம்.

சிலம்பாட்டம்

கையில் உள்ள கம்பினை வீசி ஒலி எழுப்பி விளையாடும் விளையாட்டிற்குச் சிலம்பாட்டம் என்று பெயர். கம்பு வீசுந்திறன், காலடி எடுத்து வைக்கும் முறை, வேகமாக வீசுந்திறன் இம்மூன்றும் சிலம்ப விளையாட்டில் அடிப்படைகளாகும். இது வீரத்தின் அடிப்படையில் எழுந்த விளையாட்டாகும். சிலம்பாட்டம் என்பது கம்பை மட்டும் வைத்து விளையாடுவதல்ல. சுருள்வால், ஈட்டி, கட்டாரி, சங்கிலி, மான்கொம்பு வைத்தும் இவ்விளையாட்டை விளையாடலாம். முன்பு போர்ச்சிலம்பம் இருந்தது. அதைப் போருக்கு மட்டும் பயன் படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது அலங்காரச் சிலம்பம். திருவிழாக் காலங்களில் முக்கிய நிகழ்ச்சிகளில் கம்பைப் பல விதமாகச் சுழற்றுவது. தீச்சிலம்பம், இரவில் சிலம்புக் கம்புடன் தீப்பந்தம் வைத்துச் சுழற்றுவது.

சடுகுடு

சடுகுடு விளையாட்டைப் பழந்தமிழரின் விளையாட்டென்பர். இதனைக் கபடி என்றும் கூறுவர்.

இவ்விளையாட்டினை இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று விளையாடுவர். ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குப் போகும்போது அப்பக்கத்தில் உள்ள வரைத் தொட்டுவிட்டால் விளையாட்டிலிருந்து வெளியேற வேண்டும்.

ஆடுபுலி

இக்கட்ட விளையாட்டினைப் பதினைந்தாம் புலி என்றும் ஆடுபுலி ஆட்டம் என்றும் கூறுவர். இருவர் பங்குகொள்ளும் இவ்வாட்டத்தில் (ஆடாக இருப்பவர்) பதினைந்து காய்களையும், (புலியாக இருப்பவர்) மூன்று காய்களையும் வைத்து விளையாடுவர். ஆடாக இருப்பவர் காய்களை நகர்த்திக்கொண்டே இருக்க, ஒரு காய் இருக்குமிடத்தில் ஒரு புள்ளியில் காய் இல்லாவிட்டால் அக்காயை வெட்டலாம். புலியின் காய்களை நகர்த்த முடியாத அளவிற்குக் காய்களை வைத்துவிட்டால் ஆடாக இருப்பவர் வெற்றி பெறலாம். காய்களைப் பார்த்து அடைபடாமல் தப்பித்து எதிரியின் காய்களை வெட்டி முடித்துவிட்டால் புலியாக இருப்பவர் வெற்றி பெறலாம். இதனை பொது இடங்களில் கிராமப்புறங்களில் காணலாம்.

தாயம்

மகளிர் விளையாடும் இவ்விளையாட்டினைத் தாயம் என்றும் விளையாடுவதற்கு வரையப்படும் கட்டத்தினைத் தாயக்கட்டம் என்றும், உருட்டும் பகடையைத் தாயக்கட்டை என்றும் கூறுவர். சோழிகள் முதலியவற்றை வைத்து விளையாடுவர்.

தட்டாங்கள்

ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு அதனைக் கீழே விழாமல் தரையினைத் தட்டிப் பிடிக்கும் விளையாட்டைத் தட்டாங்கள் விளையாட்டு என்பர். இலக்கியங்களில் காணப்படும் கழங்காடுதலுக்கும் இதற்கும் தொடர்பு உண்டென்பர்.

கண்ணாம்பூச்சி

சிறுவர், சிறுமியர் கண்ணை மூடிக் கொண்டு விளையாடும் விளையாட்டிற்குக் கண்ணாம்பூச்சி என்று பெயர். இது ஓடி ஒளிந்து இருப்பவர்களைக் கண்டு பிடிக்கும் விளையாட்டாகும்.

நொண்டி விளையாட்டு

ஒரு காலினைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டம் நொண்டி விளையாட்டாகும். ஒருவர் நொண்டியடித்துக் கொண்டு மற்றவர்களை தொடும் விளையாட்டு.

கிட்டுப்புள்

இரு சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. நீளக்குச்சி, கிட்டியென இரண்டு வகை வைத்திருப்பர். நிலத்தில் சிறிது பள்ளம் தோண்டி அவற்றில் கிட்டியை வைத்து நீளக் கோளாள் அடிப்பர். எதிரே உள்ளவன் பிடித்து விட்டால், அடித்தவன் காயாகி விடுவான். இவ்வாறு இருவரும் மாறி மாறி விளையாடுவர்.

பம்பரம்

பம்பரம் என்னும் விளையாட்டுப் பொருளைக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்குப் பம்பர ஆட்டம் என்று பெயர். வட்டமிட்டு அதனுள் ஒரு பம்பரத்தை வைத்து வெளியேற்றுவர். வெளியேற்றியவுடன் அனைவரும் சாட்டையால் பம்பரத்தைச் சுற்றிக் கையால் எடுக்க வேண்டும்.

குண்டு விளையாட்டு

சிறுவர்கள் விளையாடும் இவ்விளையாட்டினைக் குண்டு விளையாட்டு என்றும் கோலி விளையாட்டு என்றும் கூறுவர். நிலத்தில் குழித்தோண்டி அதனை நோக்கிக் குண்டை அடித்து அதில் விழச் செய்ய வேண்டும். கிராமத்துச் சிறுவர்களிடையே, இவ்விளையாட்டினைக் காணலாம்.

பட்டம் விடுதல்

கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் காற்றுக்காலத்தில் பட்டம் விடுவது சிறுவர்களுக்குப் பொழுதுப் போக்கான விளையாட்டாகும்.

ஊசலாட்டம்

இது இப்போது ஊஞ்சல் எனப்படுகிறது. மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர் விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க காலத்தில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் இருக்கின்றன.

சல்லிக்கட்டு

இது ஆடவரின் வீர விளையாட்டு. கூரிய கொம்புகளை உடைய எருதுகளை ஆயுதம் ஏதுமின்றித் தம் உடல் வலிமையால் இளைஞர்கள் அடக்குவர். இதுபற்றிக் கலித்தொகை, சிலப்பதி காரம் போன்ற நூல்களில் சொல்லப்படுகிறது. இதுவே இன்று சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுக்கட்டு என உருமாறித் தற்காலத்தில் நிகழ்ந்து வருகிறது.

மல்யுத்தம்

கருவிகளின் துணை இல்லாமல் தமது உடல் வலிமையால் இருவர் தமக்குள் சண்டையிடும் ஒருவகை வீர விளையாட்டு. இவ்விளையாட்டு மாற்றம் பெற்றுப் பல தற்காப்புக் கலை விளையாட்டுகளாக உருப்பெற்றுள்ளது.

கோழிப்போர்:

கோழிப்போர் தமிழர்கள் விலங்குகள், பறவைகள் போன்ற வற்றுக்கும் வீரம் இருக்கிறது என்பதைக் காட்ட அவற்றை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதை ஒரு பழக்கமாகக் கொண் டிருந்தனர். இன்றும் சிறிய நகரங்களில், பெரிய கிராமங்களில் சிறுசிறு கத்திகள் கட்டிப் பறவைகளை மோதவிடு கிறார்கள். மேலைநாடுகளில் மிருக, பறவை பாதுகாப்பு இயக்கம் என்றதன் பேரில் இப்போட்டிகளைத் தடை செய்துவிட்டனர்.

பல்லாங்குழி:

இது பெண்களால் ஆடப்படும் விளையாட்டு. தரையில் அல்லது மரப் பலகையில் உள்ள பதினான்கு அல்லது இருபத்துநான்கு குழிகளுள் புளிய விதைகளை அல்லது சோழிகளை வைத்து விளையாடுவர். ஒரு சமயத்தில் இருவர் விளையாடலாம். இது கணித முறை சார்ந்த விளையாட்டாகும். சிக்கலான இவ்விளையாட்டு, சதுரங்க விளையாட்டுக்குச் சமமாகக் கருதப்படுகின்றது.

கிட்டிப்புள்:

இது ஆடவர்களால் ஆடப்படும் வெளி அரங்க விளையாட்டு. இந்த விளையாட்டில் பெரிய குச்சியும் சிறிய குச்சியும் பயன்படுகின்றன. கிராமங்களில் பரவலாக இருந்த விளையாட்டு. இதுதான் தற்கால கிரிக்கெட் விளையாட்டிற்கு மூல வடிவமாகக் கருதப்படுகின்றது. இவ்விளையாட்டை நவீனப்படுத்தினால் உலகப் புகழ்பெற வாய்ப்புண்டு.

உறியடி
கண்ணைக் கட்டி விட்டு மேலே தொங்கும் பானையை கையில் உள்ள தடியால் அடித்து உடைக்கும் விளையாட்டு உறியடி எனப்படும்

வழுக்கு மரம்
செங்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள மரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் ஏறி மரத்தின் உச்சியில் இருக்கும் பண முடிப்பை எடுக்க வேண்டும்

மாட்டு வண்டிப்பந்தயம்

மாடு  பூட்டப்பட்ட சிறு தட்டுவண்டியினை குறிப்பிட்ட துரத்தினை வண்டியின் மூலம் முதலில் கடந்து திரும்பி வர வேண்டும்

இளவட்டக்கல்

இளவட்டக்கல் ஒரு எடை தூக்கும் விளையாட்டு. விழாக் காலங்களில் இந்தப் போட்டி விளையாட்டு நடைபெறும். குறிப்பிட்ட கல்லைத் தலைக்குமேல் தூக்கிக் காட்டும் இளைஞனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவது தமிழரின் ஒரு சாராரிடையே காணப்படும் குலவழக்கம்.