நான்காம் நிலை கட்டுரை

தமிழர் ஆடற்கலை

 

 

தமிழருடைய சிறப்பான கலைகளுள் ஆடற்கலையும் ஒன்று. இக்கலையை முற்காலத்தில் கூத்து, நட்டம், நடம் என அழைத்தனர். இப்போது ஆடற்கலையானது நடனம், நாட்டியம், பரதம் என அழைக்கப்படுகிறது.

ஆடல் என்பது தாளத்திற்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தும் ஒரு கலைவடிவம். முற்காலத்தில் தமிழர் உடல் உறுப்புகளால் குறியீடுகளை வெளிப்படுத்திப் பல்வகை உணர்வுகளைப் புலப்படுத்தினர். கையைக் குறியீடாகக் காட்டும்போது அதை எழிற்கை என்றும் அது தொழிற்படும்போது தொழிற்கை என்றும் அழைத்தனர். கருத்துகளை வெளிப்படுத்தும்போது அது பொருட்கையென அழைக்கப்பட்டது.

தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியம் அமலை, வெறியாட்டு போன்ற ஆடல் வடிவங்களைக் குறிப்பிடுகின்றது. ஆடலின்போது கலைஞர் வெளிப்படுத்தும் எட்டுவகை மெய்ப்பாடுகளை (மூக உணர்வுகள்) மிகத் தெளிவாகத் தொல்காப்பியர் விளக்குகிறார்.

ஆடற்கலை பற்றிய செய்திகள் பல சிலப்பதிகாரத்திலும் துல்லியமாகக் கூறப்பட்டுள்ளன. ஆடலரங்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி வியக்கத் தக்க வகையில் அரங்கேற்றுக் காதையில் விளக்கப்பட்டுள்ளது. அரங்கில் நிழல் விழாமல் ஒளியமைக்கப்பட வேண்டிய முறையும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இன்று மேலைத்தேய நாடுகளின் அரங்க வடிவமைப்பை இளங்கோவடிகள் இரண்டாம் நூற்றாண்டிலேயே பதிவுசெய்துள்ளார் என்பது பெருமைக்குரியது.

பாட்டு, இசை ஆகிய கலைகள் பொருத்தமுற இணைவதால் ஆடற்கலை சிறப்பாக அமைகிறது. எனவேதான், ஆடற்கலையைப் பல கலைகளின் கூட்டுக்கலை என்கிறோம். இசைக்கலைஞர்களின் இசையறிவு பற்றிச் சொல்வதோடு அரங்கில் ஆடல் நிகழும்போது, அவர்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதையும் சிலப்பதிகாரம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.

பழந்தமிழர் ஆடற்கலையை வேத்தியல், பொதுவியல் என இருவகையாக வகுத்தனர். அரசர்களுக்கு முன்னால் ஆடப்படுவது வேத்தியல். பொதுமக்களுக்கு முன்னால் ஆடி மகிழும் கலை பொதுவியல். இடைக்காலத்தில் ஆடற்கலை, இறை வழிபாட்டுடன் இணைக்கப்பட்டது. இக்கலை கோவில்களில் அரங்கம் அமைக்கப்பட்டு ஆடப்பட்டது. ஆடற்கலையில் சிறந்த ஆண்கள் கூத்தர் எனவும் பெண்கள் விறலியர் எனவும் அழைக்கப்பட்டனர். அதேபோல், பாடும் ஆண்கள் பாணர் எனவும் பெண்கள் பாடினியர் எனவும் அழைக்கப்பட்டனர்.

சிற்றூர்களில் வாழும் தமிழர்கள், பழந்தமிழர் கலையான கூத்தையும் பல்வேறு நாட்டுப்புற ஆடற்கலைகளையும் இன்றும் போற்றி வருகின்றனர். இவர்கள் தனித்தன்மையான நாட்டுப்புற இசைவடிவங்களைக் கொண்டு, சிறந்த ஆடல்வகைகளைக் காலங்காலமாக ஆடி மக்களை மகிழ்விக்கின்றனர். இக்கலைகள் ஊரக மக்களின் அன்றாட வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் இணைந்து வளர்ந்து வருகின்றன. ஊரக ஆடற்கலைஞர்கள் தலைமுறை தலைமுறையாக இவற்றைப் பேணி வருகின்றனர். நாட்டுப்புற ஆடற்கலைகளுள் கரகாட்டம், கும்மி, காவடி, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம் என்பன குறிப்பிடத்தக்கன.

தமிழர் வாழிடநாடுகளிலும் ஆடற்கலையைப் பேணி வருகின்றனர். இதை முறைப்படி கற்ற மாணவர்கள் அரங்கேற்றங்கள் செய்து வருகின்றனர். இளையோர் ஆடற்கலை வழியே மொழி, கலை, பண்பாடு போன்றவற்றையும் கற்றுக் கொள்கின்றனர். ஓர் இனத்தின் பண்பாட்டுச் சிறப்புகளைச் சுமந்து செல்பவை கலைகளே! எனவே, நாம் பழந்தமிழர் அடையாளங்களாகிய கலைகளைப் பேணுவோம். தமிழர் அடையாளங்களை நிலை நிறுத்துவோம்.