நான்காம் நிலை கட்டுரை

தமிழ்நாட்டின் ஆறுகள்

தமிழ் நாட்டில் ஓடும் முக்கியமான ஆறுகள்

ஆற்றில் மகிழ்ச்சியாக அடித்துப்பிடித்து குளிப்பதே ஒரு சுகம் தான். ஓடிவரும் ஆற்றுத் தண்ணீரில் குளிப்பது நம்முடைய உடலையும் மனதையும் புத்துணர்ச்சி பெற செய்கிறது. சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை ஆற்றில் குளிப்பதை மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உணர்வார்கள். இப்படி நம்முடைய மனதை குளிரவைக்கும் ஆறுகள் தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளது என்பதை பற்றிப் பார்ப்போம்.

1. காவிரி ஆறு

காவிரி ஆற்றின் மொத்த நீளம் 805 கிலோ மீட்டர்கள். இது கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு மலைத் தொடரில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகள் காவிரி ஆற்றின் துணை ஆறுகள். தமிழ்நாட்டில் பாயக்கூடிய காவிரி ஆற்றின் நீளம் 416 கிலோமீட்டர்கள். தமிழ் இலக்கியங்களில் இந்தக் காவிரியாறு பொன்னி ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. மேட்டூர் அணை, கிருஷ்ணராஜசாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகிய அணைகள் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள். காவிரி ஆற்றில் இரு அருவிகளும் பாய்கிறது. அதில் ஒன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவசமுத்திரம் அருவி. இன்னொன்று தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் அருவி. இறுதியில் காவிரியாறு பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. காவிரி ஆற்றின் மூலமாகத் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் பெறுகிறது.

2. தென்பெண்ணை ஆறு

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தின் சிக்பள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் ஊற்றெடுத்து தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 430 கிலோ மீட்டர்கள். தமிழ்நாட்டில் இதனுடைய நீளம் 320 கிலோ மீட்டர்கள். தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை ஆறுகள் மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு போன்றவை. இந்த ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம், கிருஷ்ணகிரி அணை, நெடுங்ககல் அணை, சாத்தனூர் அணை, திருக்கோயிலூர் அணை, எல்லீஸ் அணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் அணை இப்படி பல அணைகள் இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.

3. வைகை ஆறு

வைகை ஆறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 5333 அடி உயரத்தில் இருக்கக்கூடிய மேகமலையில் உள்ள சிகரமான வெள்ளி மலையில் ஊற்றெடுக்க தொடங்குகிறது. தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கக்கூடிய வைகை ஆற்றின் நீளம் 258 கிலோமீட்டர்கள். சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு இவைகள் வைகை ஆற்றின் துணை ஆறுகள். பொதுவாக மழைக்காலத்தில் குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே இந்த வைகை ஆற்றில் நீர் பெருக்கு ஏற்படும். பருவமழை இல்லாத மற்ற காலங்களில் இந்த ஆறு பொதுவாக வறண்டு காணப்படும். இதற்குக் காரணம் வெள்ளி மலையில் கட்டப்பட்ட அணையிலிருந்து தண்ணீர் மேற்காகக் கேரள எல்லையை நோக்கிப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் தேக்கப்படுவதால் மழைக்காலம் தவிர பிற காலங்களில் தண்ணீர் வரத்து இல்லாமல் செயற்கையாக வறட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக இந்த ஆறு பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றுக்குக் குறுக்கே பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருதநதி அணை, சாத்தையாறு அணை போன்ற அணைகள் கட்டப்பட்டுள்ளது.

4. பாலாறு

கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்க்கம் மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4851 அடி உயரத்திலிருந்து உற்பத்தியாகி தமிழ்நாட்டில் வாயலூர் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது பாலாறு. இந்த நந்தி துர்க்கம் பெங்களூருவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய மிகச் சிறந்த கோடை வாசஸ்தலம். இங்கிருந்து பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை, சித்ராவதி, அரக்காவதி ஆகிய ஆறு நதிகளின் பிறப்பிடம் இதுதான். கர்நாடகாவில் 93 கிலோமீட்டர் நீளமும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிலோ மீட்டர் நீளமும், தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் நீளமும் சேர்த்து மொத்தம் 348 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இந்த ஆறு.

5. தாமிரபரணி ஆறு

தாமிரபரணி ஆறு தன்பொருனை எனவும் அழைக்கப்படுகிறது. இது பொதிகை மலையில் தோன்றுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் தென் கிழக்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1785 மீட்டர் உயரத்தில் ஊற்றெடுக்கும் நதியானது கிழக்கு நோக்கி ஓடிக் கடைசியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னைக்காயல் என்ற கிராமத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. மொத்தம் 125 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு ஆகிய ஆறுகள் இணைகின்றன.

6. அடையாறு

சென்னை நகரில் ஓடக்கூடிய மூன்று ஆறுகளில் ஒன்று இந்த அடையார் ஆறு. இந்த ஆற்றின் மொத்த நீளம் 42 கிலோ மீட்டர்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உருவாகும் இந்த ஆறு சென்னையில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஒரு காலத்தில் மிகவும் அழகான தண்ணீரோடு ஓடிக்கொண்டிருந்த இந்த அடையாறு தற்பொழுது கழிவுநீர் கலந்து மிகவும் மோசமாகக் காணப்படுகிறது.

7. சிறுவாணி ஆறு

உலகச் சுவை நீர் தரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள ஆறு சிறுவாணி ஆறு. உலகின் மிகச் சுவையான தூய்மையான குடிநீரை தரக்கூடிய சிறுவாணி தண்ணீர் கோயம்புத்தூர் நகரின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் முக்கிய நீராதாரம். பவானி ஆற்றின் துணை ஆறான சிறுவாணி ஆறு கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக வடகிழக்கே ஓடி நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தின் மேற்கே பவானி ஆற்றுடன் கலக்கிறது. இந்தச் சிறுவாணி நதியில் ஒரு அருவியும் உள்ளது. அது சிறுவாணி நீர்வீழ்ச்சி அல்லது கோவை குற்றாலம் என அழைக்கப்படுகிறது. கோவையிலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி.

8. பவானி ஆறு

காவிரியாற்றின் முக்கியமான துணை ஆறுகளில் ஒன்று பவானி ஆறு. இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் உருவாகிறது. பவானி ஆற்றின் மொத்த நீளம் 215 கிலோ மீட்டர்கள். இதில் கேரளாவில் 22 கிலோமீட்டர் தூரம் பவானி ஆறு ஓடுகிறது.

9. அமராவதி ஆறு

அமராவதி ஆறு பழனி மலைத் தொடருக்கும் ஆனைமலை தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் ஊற்றெடுத்து பாயத் தொடங்குகிறது. கரூர் மாவட்டத்தையும் திருப்பூர் மாவட்டத்தையும் பலப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்று அமராவதி ஆறு. இந்த ஆறு மொத்தம் 282 கிலோமீட்டர்கள் பாய்ந்து செல்கிறது. இந்த அமராவதி ஆறு சங்க காலத்தில் ஆண்பொருனை நதி எனவும் அதற்குப் பின்வந்த காலத்தில் ஆம்ரபி எனவும் அழைக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி ஆகிய கிளையாறுகள் சேர்ந்து மிகப் பெரிய ஆறாக உருவெடுக்கிறது.

10. செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்பத்தியாகி சுமார் 130 கிலோ மீட்டர் தூரம் ஓடிப் பாலாற்றில் கலக்கக்கூடிய ஆறு செய்யாறு. இது ஜவ்வாது மலைத் தொடரில் உள்ள நச மலையில் ஊற்றெடுத்து பாயத் தொடங்குகிறது. பீம ஆறு மற்றும் மிருகண்ட நதி ஆகிய நதிகள் செய்யாற்றில் கலந்து பெரிய ஆறாக ஓடிக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமுக்கூடல் கிராமத்தில் பாலாற்றில் கலக்கின்றது செய்யாறு.

11. நொய்யல் ஆறு

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சிற்றோடைகளாக ஊற்றெடுத்து பயணத்தைத் தொடங்குகிறது நொய்யல் ஆறு. 180 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. சங்ககாலத்தில் இந்த ஆறு காஞ்சியாறு என அழைக்கப்பட்டுள்ளது.

காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ

மாவட்டங்கள் ஆறுகள்
சென்னை கூவம் அடையாறு
திருவள்ளூர் கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு
காஞ்சீபுரம் பாலாறு, அடையாறு, செய்யாறு
திருவண்ணாமலை தென்பெண்ணை, செய்யாறு
வேலூர் பாலாறு, பொன்னியாறு
விழுப்புரம் கோமுகி ஆறு, பெண்ணாறு
கடலூர் தென் பெண்ணை, கெடிலம்
நாகப்பட்டினம் வெண்ணாறு, காவிரி, வெட்டாறு
திருவாரூர் காவிரி, குடமுருட்டி பாமணியாறு
தஞ்சாவூர் காவிரி, குடமுருட்டி, பாமணியாறு கொள்ளிடம்
பெரம்பலூர் கொள்ளிடம்
திருச்சிராப்பள்ளி காவிரி, கொள்ளிடம்
நாமக்கல் காவிரி, நொய்யல், உப்பாறு
சேலம் காவிரி, வசிட்டா நதி
தருமபுரி காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு
கிருஷ்ணகிரி தென்பெண்ணை, தொப்பையாறு
ஈரோடு காவிரி, நொய்யல், அமராவதி.பவானி
கோயம்புத்தூர் அமராவதி, சிறுவாணி
கரூர் அமராவதி, நொய்யல்
திண்டுக்கல் மருதா ஆறு, சண்முகா ஆறு
மதுரை வைகை, பெரியாறு
தேனி வைகை, பெரியாறு, சுருளியாறு, மஞ்சளாறு
விருதுநகர் கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, அர்ஜூனா ஆறு
திருநெல்வேலி மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு
கன்னியாகுமரி கோதையாறு, பழையாறு
தூத்துக்குடி தாமிரபரணி, மணிமுத்தாறு

 

தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்

  1. குற்றாலம் – திருநெல்வேலி
  2. பாபநாசம் – திருநெல்வேலி
  3. கல்யாண தீர்த்தம் – திருநெல்வேலி
  4. ஒகேனக்கல் – தருமபுரி
  5. சுருளி – தேனி
  6. திருமூர்த்தி – கோவை