கதைகள் கட்டுரை

பகிர்ந்துண்டு வாழ்வோம்

அடர்ந்த காடு. அங்குப் பறவைகள் கூட்டங் கூட்டமாக வசித்து வந்தன. அவற்றிற்குத் தேவையான உணவுகள் அக்காட்டிலேயே கிடைத்தன. அதனால், அவை மிகவும் மகிழ்வுடன் பறந்து திரிந்தன. தாய்ப்பறவைகள் இரைதேடி வந்து, குஞ்சுகளுக்கு ஊட்டி விட்டன. இவ்வாறாகப் பறவைகள் மிகவும் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தன.

இவ்வாறிருந்த வேளையில் பருவமழை பொய்த்தது. அதனால், பச்சைப் பசேலென இருந்த அக்காடு வறண்டு போனது. பறவைகளுக்கு உணவு கிடைக்கவில்லை. தாய்ப்பறவைகளால் குஞ்சுகளின் பசியைப் போக்க முடியவில்லை. அவை பசியினால் தவித்தன.

அங்கிருந்த கொக்கு ஒன்று உணவு தேடி, வேறு இடத்திற்குப் பறந்து சென்றது. அங்கு நிறைய உணவுகள் கிடைத்தன. கொக்கு அவற்றைப் பசியாற உண்டது. தன் குஞ்சுகளுக்குத் தேவையான உணவைத் தனது நீண்ட அலகில் வைத்துக் கொண்டது. அது மகிழ்வுடன் காட்டுக்குத் திரும்பியது.

திரும்பும் வழியில் அந்தக் கொக்கு ஒரு மரத்தில் இளைப்பாறியது. அப்பொழுது, குஞ்சுகள்
கீச்சிடும் ஒலி அதற்குக் கேட்டது. கொக்கு அங்கும் இங்கும் பார்த்தது. மரத்தில் இருந்த கூட்டில் குருவிக் குஞ்சுகளைக்
கண்டது. அவை பசி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தன.

அக்குஞ்சுகளின் நிலையைக் கண்ட கொக்கு மிகவும் கவலைப்பட்டது. குஞ்சுகளுக்குப்
பக்கத்தில் சென்று, தான் கொண்டு வந்த உணவைக் குஞ்சுகளுக்குப் பகிர்ந்து கொடுத்தது. குஞ்சுகள் பசியாறி மகிழ்ந்தன.

கொக்கு மீண்டும் இரை தேடிப் பறந்து சென்றது.